மருந்தே உணவாக எடுத்துகொள்ளும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நோய்கள் தீவிரமாக காரணமே நமது உணவு முறையில் உண்டான மிகப்பெரிய மாற்றம் தான். உணவு மருந்தானது போய் உணவே உடலை உருக்குலைக்க வைக்கும் அளவுக்கு உணவு பழக்கத்தில் மாற்றத்தை சந்தித்திருக்கிறோம். அப்படி உடலுக்கு கேடுதரும் உணவு பொருளில் முக்கியமான உணவு பொருள்கள் குறித்து தெரிந்துகொள்வோம். எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் கார வகைகளான சிப்ஸ், மொறுமொறு ஸ்நாக்ஸ் வகைகள் போன்று இனிப்பு வகைகளும் எண்ணெயில் பொரித்தெடுக்கப்படுவதுண்டு. பெரும்பாலும் இவை பாமாயில் அல்லது டால்டா சேர்த்து செய்யபடுவதால் இதை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். இனிப்பு கண்டிப்பாக தேவை. அதிலும் வீட்டில் தயாரித்து சாப்பிட வேண்டும். நாட்டுசர்க்கரை, வெல்லம், தேன், பனங்கருப்பட்டி போன்றவற்றில் செய்த இனிப்பு வகையறாக்கள் நல்லது செய்யும்.
உடனடியாக ரெடியாகும் உணவுகள் எல்லாமே தவிர்க்கப்பட வேண்டியதே. வெந்தும் வேகாததும் அரைவேக்காடுமாய் சமைக்கப்படும் உணவுகள் உடலுக்கு நன்மை செய்யாது. நூடுல்ஸ் முதல் ஐந்து நிமிடத்தில் தயாராக கூடிய இன்ஸ்டண்ட் உணவுகள் வரை பெரும்பாலும் தவிர்த்துவிடுவதே நல்லது. இந்த வகை உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பிரசர்வேட்டிவ் உடன் செயற்கை வண்ணங்களும் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. இவை உடலுக்கு நன்மை செய்வதை காட்டிலும் குறைபாட்டை உண்டாக்கவே செய்யும். எப்போதாவது ஒரு முறை எடுத்துகொள்ளலாம். அடிக்கடி சாப்பிடுவதால் ஆரோக்கியத்தில் குறைபாடு நேரிடும்.
பட்டை தீட்டப்பட்ட உணவுகள் எல்லாமே தவிர்க்கவேண்டியதே. குறிப்பாக வெள்ளை அரிசியை பாலிஷ் செய்யும் போது அதில் இருக்கும் சத்துகளும் சேர்த்து நீக்கப்படுவதால் அதிலிருக்கும் மாவுச்சத்து உடல் எடையை அதிகரித்து விடுகிறது. பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கும், பாரம்பரிய அரிசிக்கும் மருத்துவ குணத்தில் அதிக வேறுபாடு உண்டு. பட்டை தீட்டப்பட்ட அரிசியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்தும் காரணிகள் அதிகமாக உண்டு. இதனால் உணவு எளிதில் செரிமானம் ஆவதோடு நீரிழிவு நோய் உண்டாக்கும் வாய்ப்பையும் அதிகரித்துவிடுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆயுளை குறைத்துவிடும் அளவுக்கு அபாயகரமானவையாகவும் இருக்கலாம். அதே நேரம் எந்த வகையில் அவை பதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை பொறுத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, விதைகள், தானியங்கள், முட்டைகள் என்றூ பல பொருள்கள் பதப்படுத்தப்படுகிறது. இவற்றில அதிக காலம் கெடாமல் இருக்கவும், சுவை மாறாமல் இருக்கவும் பதப்படுத்தியிருப்பார்கள்.
உப்பு, எண்ணெய், சர்க்கரை நொதித்தல் முறை இதில் பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு பாலாடைக் கட்டி, பன்றி இறைச்சி, மீன், டின்னில் அடைக்கப்படும் பழங்கள் போன்றவை. இவற்றை தவிர்க்க வேண்டாம். எப்போதாவது எடுத்துகொள்ளலாம்.ஆனால் அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் என்னும் தொழிற்சாலிகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பாக்கெட்டில் பெரிய பட்டியலே இருகும்.
இதில் ஐந்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கலந்திருந்தால் அது அல்ட்ரா பதப்படுத்திய உணவு பொருளாக இருக்கலாம். இத்தகைய உணவுகளை பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது. எல்லா காலங்களிலும் இவை ஆரோக்கியத்தை குறைக்கும் தன்மை கொண்டவையே, என்பதால் இயன்றவரை இத்தகைய பொருளை தவிர்ப்பதே நல்லது.