நம்ம சமுதாயத்தில் யாருக்குத் தான் பணக்காரராக வேண்டும் என ஆசை இல்லாமல் இருக்கும்? யோசித்து பார்த்தால், யாருக்குமே இந்த ஆசை இல்லாமல் இருக்காது. ஒரு சிலர், எனக்கு அதுபோன்ற ஆசைகள் இல்லை என பேச்சளவில் சொன்னாலும் கூட ஏதாவது ஒரு வழியில் பணக்காரராக வேண்டும் என்றே மனதளவில் சிந்திப்பர். இதில் பெருங் கோடீஸ்வரர்களே பணம் மட்டும் வைத்துக் கொண்டு உறவினர், மக்கள், நிம்மதி போன்ற செல்வங்களை இழந்து காணப்படுவர். இத்தகைய செல்வங்களைக் கொண்டு யார் உள்ளாரோ அவரே உண்மையான பணக்காரர். செல்வந்தனாக வேண்டும் என்றால் கடின உழைப்பும் சரியான நேரத்தில் சரியான முடிவும் எடுக்க வேண்டியது கட்டாயம்.
அதுமட்டும் போதுமா என்றால், இல்லை. பணிப் பளுவில் ஓடோடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் மனதிற்கும், உடலிற்கும், சுற்றியுள்ளோரின் கெடும் பார்வையில் இருந்து தப்பிக்க ராசிக்கென பெயர்பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலமே கெட்ட சகுனத்தில் இருந்து விலகி, ஆரோக்கியமான செல்வந்தர் ஆகும் வாய்ப்புகள் கிட்டும். அப்படி, இந்த மூன்று ராசிக்காரர்களும் எந்தக் கோவிலுக்குச் சென்றார் கோடீஸ்வரராகும் யோகம் கிடைக்கும் என பார்க்கலாமா?.
கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவில்!
“ரிஷப ராசி”க்கு அதிபதியாக இருப்பவன் சுக்கிரன். ராசிநாதன் சுக்கிரனின் தன்மை, மற்றும் இந்த ராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் அடிப்படையில் ரிஷப ராசிக்காரர்கள் கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவில்பாளையத்தில் அருள்பாலிக்கும் கால காலேஸ்வரரை தரிசித்து வழிபடவேண்டும்.
நந்தி பகவானின் அருள்பெற்ற ராசியாக ரிஷபம் உள்ளதால், இவர்களின் வழிபாட்டுக்கு இந்தக் கோவிலே ஏற்றது. இங்குள்ள மூலவர் விசேஷ யோகங்களை அளிப்பவர். இவருக்கு சந்தன அலங்காரம் செய்து வழிபடுவது சிறந்தது. இந்த ராசிக்கு தற்போது கண்டகச் சனி நடப்பதால், ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூத்தி போன்றவற்றை இந்த ஆலயத்தில் செய்யலாம். இத்தலத்தில் பிரதோஷம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை நட்சத்திர தினங்களில் சென்று வழிபடுவது மேலும் பலனூட்டும். ரிஷப ராசியுடையோர் மூலவருக்கு தும்பைப் பூ மாலை அணிவித்து வழிபட செல்வம் கொட்டும்.
சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் கால சுப்பிரமணியர், கருணாகரவல்லி அம்மன் சன்னதிகள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் இடையே முருகன் வீற்றுள்ளார். மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி இங்கே திருஉருவமாக அமைந்துள்ளார். மூலவர் மணல் மற்றும் நுரையால் செய்யப்பட்டதால் நெய், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
திருவக்கரை சந்திரமெளலீஸ்வரர் ஆலயம்!
“கடக ராசி”க்கு அதிபதியாக இருப்பவர் சந்திரன். சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். ஆகவே, விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரையில் மூன்றாம் பிறையுடன் அருள்பாலிக்கும் சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும்.
இங்குள்ள துர்கை அம்மன் மிகுந்த சக்திவாய்ந்தவளாக கருதப்படுகிறாள். இவளை வழிபட மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோவிலின் முகப்பில் ஈசானியத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். கடகத்தின் ராசிநாதனாகிய சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது. அதனால், இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபட வேண்டும். பஞ்சமி, அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இத்தலத்திற்குச் சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கிவர சகல தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான நாட்கள் உண்டாகும்.
மூலவர் சந்திரமவுலீஸ்வரர் மும்முக லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இது வேறெங்கும் காணமுடியாத அம்சமாகும். காளி கோவிலின் எதிரே மேற்கு நோக்கி ஆத்மலிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக் காலத்தில் லிங்கத்தின் மேல் நீர்த்துளிகளும் காணப்படுவது அதிசயம். சிவனின் தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் இக்கோவில் 263வது தலம் என்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.
உத்தரகோசமங்கை மரகத நடராஜர்!
“சிம்ம ராசி”க்கு அதிபதியாக இருப்பவர் சூரியன். இவர், பிதுர்க் காரகனாகவும் ஆத்ம காரகனாகவும், அரசியல், அரசாங்க பதவி, தலைமை குணத்தை தருபவராகவும் விளங்குகிறார். அளவற்ற ஆற்றல் கொண்ட சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தையே பெயராகக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்கள நாதரையும், பூண்முலை அம்மனையும் சிம்ம ராசிக் காரர்கள் வழிவட தொழிலில் முன்னேற்ம் அடைந்து வேண்டிய அளவு செல்வம் பெருகும்.
இத்தலம் கயிலாயத்துக்கு இணையானது என்பதால், இதைத் தென்கயிலாயம் என்றும் அழைப்பர். இங்கு அருள்பாலிக்கும் மூலவர் இத்தலத்தின் தாமரைப்பொய்கையில் யோகிகளுக்குக் காட்சியளித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இங்குள்ள மரகத நடராஜரை வணங்கினால், வாழ்வில் அனைத்து வகை யோகங்களும் வந்து சேரும். மல்லிகைப் பூ மற்றும் வில்வத்தால் இங்குள்ள மங்கள நாதரை அலங்காரம் செய்து வழிபடுவது சிறந்தது. ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், அமாவாசை, தசமி, திரயோதசி உள்ளிட்ட விஷேச நாட்களிலும் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
பொதுவாக ஒரு கோவிலுக்குச் செல்லும் நாம், ஒரு முறை வணங்கிவிட்டு திரும்பிவிடுவோம். ஆனால், ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் வகையிலான கோவில்களில் இதுவும் ஒன்று. தென்னிந்தியா மட்டுமின்றி பிற பகுதிகளில் கூட காண முடியாத அற்புதமிக்க மரகத நடராஜர் சிலை இத்தலத்தில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புவாக இங்குள்ள இலந்தை மரத்தடியில் தோன்றியதாக வரலாறு. இன்றளவும் அந்த மரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகர் லிங்கவடிவில் இங்கே காட்சியளிக்கிறார்.