ஆலயம்:’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ என்றால் வயப்படுதல் அல்லது ஒன்றுபடுதல். ஜீவாத்மாவாகிய மனிதர்களை, பரமாத்மாவாகிய, இறைவனுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஏற்ற இடம் என்பதால் ‘ஆலயம்’ என்கிற பெயர் வந்தது. கோவில்: ‘கோ’ என்றால் அரசன். ‘இல்’ என்றால் இல்லம். ஆதிகாலத்தில், அரசர்கள் வாழ்ந்து வந்த அரன்மனைகளுக்குத்தான் கோவில் என்று பெயர். புறநானுறில், ‘சோழன் கோவில்’ என்றும், பரிபாடலில், ‘கண்ணன் கோவில்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ‘கோ’ என்பதற்கு ‘தலைவன்’ என்றும் ஒரு பொருள் இருப்பதால் அனைத்து படைப்புகளுக்கும் தலைவனாக விளங்கும் இறைவனின் இல்லத்தை ‘கோவில்’ என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். கோவிலுக்கு ‘கோட்டம்’, ‘அம்பலம்’ என்ற பெயர்களும் உண்டு.

கோவிலுக்கு நாம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய காரியங்கள் என்று பல உள்ளன. ஆனால் நான் அதை கடைபிடிக்க தவறி விடுகின்றோம். எத்தனைமுறை கோவிலுக்கு சென்றிருந்தாலும் இதை நாம் சரியாக செய்வதே இல்லை! என்ன என்னென்ன காரியங்கள் நான் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்…

சிவன் கோவிலுக்கு செல்லும் போது முதலில் சிவனை வணங்கிய பின் தான் உமாதேவியை கும்பிட வேண்டும் பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில் தாயாரை கும்பிட்டுவிட்ட பின் தான் பெருமாளை கும்பிட வேண்டும்

நவகிரகத்தை வழிபாடு செய்யும் போது கோவிலில் பிரதான தெய்வங்களை எல்லாம் வணங்கி விட்டு, கோவிலின் பிரகாரத்தை சுற்றி விட்டு தான் வணங்க வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்யும் போது ஆஞ்சநேயரை கும்பிட்டுவிட்டு ஒரு நிமிடமாவது கோவிலில் அமர்ந்து இருந்துவிட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

விநாயகர் கோவிலுக்கு போனால் ஆலயத்தை ஒரு முறை சுற்ற வேண்டும். சிவன் கோவிலுக்கு போனால் மூன்று முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும். பெருமாள் கோவிலுக்கு போனால் நான்கு முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும்.

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். அம்மன் கோவிலுக்கு வெள்ளிகிழமை செல்வது நல்லது. துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் வணங்கவேண்டும்…காளியம்மனை அஷ்டமி திதியில் வணங்குதல் நல்லது
