பொதுவாக நாம் வயிறு நிறைய சாப்பிட்ட பின்பு என்ன செய்வோம்? குட்டித் தூக்கம் போடுவோம்? அல்லது ஒரு கப் டீ குடிப்போம்? ஆண்களை எடுத்துக் கொண்டால், ஒரு சிகரெட் அடிப்பார்கள். ஆனால், நம்மில் பலர் உணவு உட்கொண்ட பின் குளிப்பார்கள். இது தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான பழக்கம் மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கமும் கூட. நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியுடன் இருந்தால், சாப்பிட்ட உடனேயே உங்களை குளிக்க விடமாட்டார்கள். சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது என்று பலமுறை சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அவர்களிடம் ஏன் என்று காரணம் கேட்டால், நல்லதல்ல என்று மட்டும் சொல்வார்கள். அதற்கு பின் எந்த ஒரு ஆன்மீக காரணமும் இல்லை. ஆனால் அறிவியல் காரணம் மட்டும் உள்ளது. அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குளிக்கும் போது நடக்கும் செயல் – குளிக்கும் போது நம் உடலின் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியடையும். கடந்த 24 மணிநேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேற்றும் போது, உடலினுள் உள்ள செல்கள் மிகவும் ஆற்றலுடனும், புத்துணர்வுடனும் இருக்கும். இதனால் தான் குளித்து முடித்ததும் பசி ஏற்படுகிறது.

ஏன் சாப்பிட்டு குளிப்பது வீண்? உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கும். எனவே உண்டபின் குளிக்கக் கூடாது

சாப்பிட்ட பின் குளிப்பதால் சந்திக்கும் விளைவு – உணவு உட்கொண்ட உடனேயே குளித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். உணவு உண்ட உடன் குளித்தால் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இல்லாத போது, செரிமானம் தாமதமாக நடைபெறுகிறது.

உண்ட அந்த உணவு குடலில் அப்படியே நொதிக்க அல்லது அழுக ஆரம்பித்து, உங்களை மிகவும் சோர்வாக, மந்தமாக உணரச் செய்வதுடன், மலச்சிக்கல் மற்றும் சில சமயங்களில் குமட்டல் பிரச்சினையையும் சந்திக்க வைக்கும்.

ஆயுர்வேதத்தின் படி உடலில் உள்ள நெருப்பு உறுப்பு தான் உணவுக்கு பிந்தைய செரிமானத்திற்கு காரணமாகும். நீங்கள் சாப்பிட்டதும் உடனே குளிக்கும் போது, செரிமானம் நடக்க உதவ வேண்டிய ஆற்றல் அல்லது நெருப்பு, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க திருப்பிவிடப்படுகிறது.

இந்த காரணத்தினால் தான், பண்டைய மருத்துவ முறை உணவு உட்கொண்ட பிறகு குறைந்தது 2 மணிநேரத்திற்கு குளிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறது. அதே சமயம் அறிவியலின்படி ஒரு உணவு உட்கொண்ட பின்பு குறைந்தது 35 நிமிடம் கழித்து குளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

குளித்த பின் உண்பதால் நேரும் நன்மைகள் -ஒரு குளித்து முடித்த பின் உணவு உட்கொள்ளும் போது, உடலானது உணவில் உள்ள சத்துக்களை முற்றிலும் உறிஞ்சி, உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று கொள்ளும்.
