கோடைக்காலங்களில் குளுமையாக வைத்திருக்க உதவும் பொருள்களை இயற்கை நமக்கு அள்ளித்தந்திருக்கிறது. அவற்றில் ஒன்று கற் றாழை. கற்றாழையை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். கற்றாழையின் மருத்துவ குணங்களை தெரிந்துகொண்டால் இனி நீங்களும் கற்றாழையை விடமாட்டீர்கள். குறைபாடுகள் இருந்தால் மட்டும் தான் மாத்திரைகளை நாடுகிறோம். ஆனால் குறைபாடு இல்லையென்றாலும் இந்த இயற்கை தரும் பொருள்களை பயன்படுத்தினால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனையை வரவே விடாமல் செய்யும். அப்படி என்ன இருக்கு கற்றாழையில் தெரிந்துகொள்ளலாமா?

கற்றாழை
சோற்றுக்கற்றாழை என்று அழைக்கப்படும் இதை ஆலோவேரா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். கற்றாழையில் பலவகைகள் உண்டு. செங்கற்றாழை, சோற்று கற்றாழை, வெண் கற் றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை என்று உண்டு. ஆனால் பெரும்பாலும் நாம் சோற்றுக்கற்றாழையைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

கற்றாழை தாவரம் இருக்கும் இடத்தில் பொருந்திகொள்ளும் என்பதால் இதற்கு அதிகம் இடம் தேவைப்படுவதில்லை. தோட்டம் இல்லாத மாடி வீட்டிலும் சிறிய தொட்டியில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
கற்றாழை தாவரத்தின் சிறந்த குணம் இவை சிறப்பாக பசுமையாக வளர அதிக தண்ணீர் தேவையிருக்காது என்பதுதான். தற்போது பெண்கள் அழகுக்காகவே விரும்பி வளர்க்க தொடங்கியிருக்கிறார்கள். அதை தொடர்ந்து சாலையோர கடைகளிலும் கற்றாழை சாறு விற்பனை அதிகரித்து வருகிறது.

கற்றாழையும் சத்துகளும்
கற்றாழையில் இயற்கையாகவே வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள், 70 க்கும் அதிகமான புரதச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. கற்றாழையின் மடலில் 4 லிருந்து 25 சதவீதம் வரை அலோயின் அலோசோன் என்னும் வேதிபொருள்கள் இருக்கின்றன. இதை உள்ளுக்கு பயன்படுத்தும் போது நன்றாக 7 முறை தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.

உடல் பலவீனமானவர்களை பலப்படுத்துவதில் தொடங்குகிறது கற்றாழையில் இருக்கும் சத்துகள். உடல் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துவதிலும் இயற்கையாகவே அழகை அள்ளிதருவதிலும் கற்றாழையின் குணங்களை அளவிடவே முடியாது.
உடலில் இருக்கும் கழிவுகளை சீராக வெளியேற்ற முடியாமல் தான் எண்ணற்ற நோய்கள் பெருகி வருகிறது அந்த வகையில் கழிவுகளை வெளியே தள்ள கற்றாழை ஒன்று போதுமாம்.