தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்த விவகாரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மனுவில், ” நான் +2 படிக்கும்போது டார்வின் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாக காதலித்தார். +2 முடித்து நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் படிப்பதற்காக சேர்ந்தேன். தற்போது டார்வின் தன்னுடன் சேர்ந்த வாழுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார். டார்வினுக்கும், எனக்கும் தூத்துக்குடி லூர்தம்மாள் ஆலயத்தில் 08-08-2017-ல் திருமணம் நடைபெற்றதாக கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்து சான்றிதழ் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற்றபோது, போலி ஆவணங்களை பயன்படுத்தி லூர்தம்மாள் ஆலயத்தில் எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. ஆவணங்களுடன் ஆலைய பங்கு தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது.
போலி சான்றிதழ்களை பயன்படுத்தி எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்துள்ளார் டார்வின். மேலும், திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் அந்த தினத்தில் நான் தூத்துக்குடியில் இல்லை. கல்லூரியில் செய்முறை தேர்வில் (Practical Exam) பங்கேற்றேன். அதற்கான ஆன்லைன் வருகை பதிவேடு உள்ளது.
இருப்பினும் போலி திருமணப்பதிவு அடிப்படையில் தன்னுடன் வந்து வாழுமாறு டார்வின் ஜனவரி மாதம் முதல் என்னை மிரட்டி வருகிறார். எனவே கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை ரத்துசெய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு அளித்தேன். அவர் என் மனுவை நிராகரித்துவிட்டார். ஆகவே, கீழுர் சார்பதிவாளர் வழங்கிய திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.