நிகழபோகும் குரு பெயர்ச்சி 2020 : குரு பார்வையால் கோடிஸ்வரராகும் யோகம் யாருக்கு வர போகுது தெரியுமா?

மருத்துவம்

மகரம் ராசியில் ஐப்பசி 30ஆம் தேதி அதாவது நவம்பர் மாதம் 15ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி அதாவது நவம்பர் 20ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. மகரம் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இங்கிருந்து குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுமே நல்ல பலன்களை அடையப்போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

குருவின் சஞ்சாரம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருகிறது. பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும். பிசினஸ், தொழில், வியாபாரத்தில் மாற்றம் வரும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சொத்து, வண்டி வாகனம் வாங்கலாம். உத்யோக உயர்வை தரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. உங்க குடும்பம் குதூகலமாகும். பிரச்சினைகள் நிவர்த்தியாகும். பணப்பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். நான்காம் வீட்டில் குரு பார்வை விழுவதால் நிச்சயம் இடம் மாற்றம் ஏற்படும், சுகமும் சந்தோஷமும் ஏற்படும், வேலையில் இடமாற்றம், சிலருக்கு வீடு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. ஆறாம் வீட்டில் குருவின் பார்வை விழுகிறது. கடன் பிரச்சினை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.குருபகவான் ஏப்ரல் மாதம் கும்பம் ராசியில் பயணம் செய்வார். ஏப்ரல் முதல் குரு அதிசாரமாக குரு கும்பம் ராசியில் பயணம் செய்யும் காலம் சுபமான காலம் வெளிநாடு செல்லும் யோகம் வரும். திருமணம் முடிந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீராத பிரச்சினைகள் நீங்கும். மேஷத்திற்கு குரு பத்தாம் இடத்திலும் 11ஆம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இது சுபமான குரு பெயர்ச்சி.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு அஷ்டம குருவாக இருந்து இனி பாக்ய ஸ்தான குருவாக ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். இதுநாள்வரை பண கஷ்டம் மனக்கஷ்டம் இருந்தது. இனி இந்த குரு பெயர்ச்சியால் பிரச்சினைகள் நீங்கும். வீண் பண விரையங்கள் இனி வராது. தடை தாமதங்கள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினை நீங்கும். மகரம் ராசியில் இருந்து குருவின் பார்வை ரிஷபம் ராசிக்கு விழுகிறது. ஒன்பதாம் வீட்டில் குரு சனி இணைவு. நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் வசந்தம் வீசும். கவலை கஷ்டங்கள் நீங்கும். சொந்த வீடு வாசல் வாங்கலாம். தடைபட்ட காரியம் தடையின்றி நிறைவேறும். குரு சுப கிரகமாக இருந்தாலும் ரிஷபம் ராசிக்கு அதிகம் நன்மை செய்ய மாட்டார் என்றாலும் குருவின் பார்வையால் மனஅழுத்தங்கள் நீங்கும் உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரிகளுக்கு நல்லது நடக்கும். திருமணம் சுப காரியம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி நிறைய பாக்கியங்களை கொடுக்கும். அவப்பெயர்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்களை நீக்கும். ஐந்தில் குரு பார்வை விழுவதால் திருமணம் நடைபெறும். ரிஷபம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி நிறைய நன்மைகளை செய்வார். 2021ல் குரு ஏப்ரல் மாதம் கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைவார் ஆகஸ்ட் வரை பயணம் செய்வார். இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும் ஏற்படும். சுபமான பலனை கொடுக்கும்.

மிதுனம்

ஏழு பத்துக்கு அதிபதி குரு பகவான் அஷ்ட ஸ்தானத்திற்கு செல்கிறார். கஷ்டங்கள், சிக்கல்கள் நிறைந்த இடம் எட்டு. குரு எட்டில் பயணம் செய்வதால் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். குரு பார்வை உங்க ராசிக்கு 12ஆம் வீடு, இரண்டாம் வீடு, நான்காம் வீடுகளின் மீது விழுகிறது. ரொம்ப விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். எந்த காரியம் செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. ஐந்து மாதத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பகவான் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்வது நன்மை நடைபெறும். நெருக்கடிகள் நீங்கும். காரணம் குரு எட்டாம் வீட்டில் இருந்து அதிசாரமாக ஆறு மாதங்கள் கும்பம் ராசியில் பயணிப்பார்.அது பாக்ய ஸ்தானம் ஒன்பதாம் வீட்டில் இருந்து குருவின் பார்வை 2021 ஏப்ரல் மாதம் முதல் உங்க ராசியின் மீது விழுகிறது. மன அமைதி கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கடகம்

கடகம் ராசிக்கு குருபகவான் இதுநாள் வரை ஆறாம் வீட்டில் இருந்தார். குரு ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆகி உங்க ராசியை பார்வையிடுகிறார். சிறப்பான கால கட்டம். சனி அஷ்டமத்தில் இருந்தாலும் குரு பார்வை சஞ்சாரத்தினால் நிறைய நன்மைகள் நடைபெறும். பண மழை பொழியப்போகிறது. இழந்த விசயங்களை நீங்கள் பெறும் காலம் வந்து விட்டது. நல்ல செய்திகள் தேடி வரும்.மகரம் ராசிக்கு செல்லும் குருவின் பார்வை நேராக உங்க ராசிக்கு விழுகிறது. ராகு 11ஆம் வீடு ரிஷபத்தில் உள்ள ராகுவை குரு பார்க்கிறார். வருமானம் அதிகரிக்கும். குருவின் பார்வை மூன்றாம் வீட்டில் விழுவதால் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். குரு உங்க ராசிக்கு ஆறு ஒன்பதுக்கு அதிபதி என்பதால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் குரு உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு செல்வார் என்றாலும் குரு பார்வையால் உங்களுக்கு நன்மையே நடக்கும். திருமணயோகம் வரும்.உயர்கல்வி யோகத்தை குரு பகவான் கொடுப்பார். குரு பார்வையால் நோய்கள் நீங்கும். சில நேரங்களில் குரு பொருளாதார ரீதியான சிக்கல்களை கொடுப்பார். சிலருக்கு விரைய செலவுகள் வரலாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

குரு பகவான் உங்க ராசிக்கு ஐந்து எட்டாம் வீட்டு அதிபதி. இப்போது ஆறாம் வீட்டில் சென்று நீசம் பெற்று சஞ்சரிக்கிறார். சனி ஏற்கனவே ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் விழுகிறது. சுப காரியங்களுக்காக கடன் வாங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். உங்க ராசிக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும்.பயணங்களால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்ப உறவில் சுப நிகழ்ச்சி நடைபெறும். நீசமான குரு நீச பங்க ராஜயோகம் பெற்று அமர்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு பத்தாம் வீடு, விரைய ஸ்தானம், இரண்டாம் வீடுகளின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். நிறைய சுப விரைய செலவுகள் வரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் தேடி வரும். குடும்பம் குதூகலமாக இருக்கும். நிறைய பணம் வரும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். பயணங்களில் நன்மை நடைபெறும் வெளியூர் பயணங்கள், வேலை விசயமான பயணங்களில் நன்மை நடைபெறும். சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். குரு 2021 ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகி உங்க ராசியை பார்வையிடுவார். எதிர்பார்க்காத யோகம் வரும். இந்த குரு பெயர்ச்சியால் பாதிப்புகள் எதுவுமில்லை பலன்கள் அதிகம் ஏற்படும்.

கன்னி

குரு பகவான் நவம்பர் முதல் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு உங்க ராசிக்கு நான்கு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே சனி ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீச பங்க ராஜயோகம் கிடைக்கும். உங்களுக்கு திருமண யோகம் கை கூடி வரும் நீண்ட நாட்களாக திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உற்சாகம் அதிகரிக்கும். உடலில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அதிகரிக்கும்.தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் நீங்கி கை கூடி வரும். பொருளாதார தடைகள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடு, பத்னொன்றாம் வீடான லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. புதிய வேலை கிடைக்கும் செய்யும் தொழிலில் லாபம் வரும், புதிய வருமானம் வரும். குரு பகவான் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார் இது ஆறாம் வீடு.ஆறில் அமரப்போகும் குரு உங்க ராசிக்கு பத்தாம் வீடு, விரைய ஸ்தானம், இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் மீது விழுகிறது. உங்க ஜனன ஜாதகத்தில் குரு சரியான இடத்தில் சஞ்சரித்தால் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. உங்களுடைய பலவீனங்கள் நீங்கி பலம் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியால் வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தொழில் தொடங்குவது, திருமணம் சுபகாரியம் செய்வது போன்ற நற்காரியங்களை செய்து விடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

துலாம்

சுக்கிரன் உங்க ராசி அதிபதி. குரு உடல் ஆரோக்கியம், செல்வம் செல்வாக்கு தருபவர் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நிறைய நன்மைகளை தரப்போகிறது. குரு பகவான் இப்போது மூன்றாம் வீட்டில் மறைந்திருக்கிறார். நவம்பர் மாதம் முதல் குருபகவான் நான்காம் வீட்டிற்கு போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தின் மீது விழுகிறது. குரு பார்வையால் உங்களுடைய தோஷங்கள் நீங்கும் அவமானங்கள் நீங்கும். மனரீதியான பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு சுப விரைய செலவுகள் வரும். சகோதர சகோதரிகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்கால திட்டமிடல்கள் வெற்றிகரமாக முடியும். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குரு அதிசாரமாக கும்பம் ராசிக்கு போகும் போது குருவின் சஞ்சாரம் பார்வையால் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். காரணம் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கும், ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீது விழுகிறது. திருமணம் சுப காரியம் விசயமாக பேசுவதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் நேரம் கூடி வரும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுடைய குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்

குரு பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு பயணம் செய்யப்போகிறார். ஏழரை சனி முடிந்து இப்போதுதான் நிம்மதியான நிலையை அடைந்திருப்பீர்கள். ஜென்ம ராசியில் கேது, ஏழாம் வீட்டில் ராகு, என கிரக நிலைகள் உள்ளன. குரு மூன்றாம் வீட்டில் நீசமடைந்து சஞ்சரிப்பதால் கடன் பிரச்சினை நீங்கும். கடனை அடைக்க ஒரு கடனை வாங்குவீர்கள். சொத்து பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. குரு ஒன்பது மற்றும் லாப ஸ்தானங்களின் மீது விழுவதால் பண வரவு கிடைக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். திருமணம் சுப காரியங்கள் கை கூடி வரும். பணம் விசயங்களில் கவனமாக இருங்கள். உங்களுடைய கையில் இருந்து பணத்தை கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும் பணம் திரும்ப வருவதில் சிக்கல் ஏற்படும். குருவின் சஞ்சாரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கும். இந்த குரு பெயர்ச்சியினால் பலன்கள் உங்களுக்கு சுமாராக இருந்தாலும் பாதிப்புகள் அதிகம் வராது. காரணம் குருவின் பார்வைஉங்களுக்கு என்ன தசை நடக்கிறது குரு உங்க ராசியில் எப்படி இருக்கிறார் என்று பார்த்து பலன்களை முடிவு செய்யலாம்.

தனுசு

தனுசு ராசியில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி குரு இனி மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு இரண்டாம் வீட்டிற்கு போவது சந்தோஷமான விசயம். ஜென்ம ராசியில் இருந்த கேது இப்போ இடப்பெயர்ச்சியாகி 12ஆம் வீட்டிற்கு சென்று விட்டது நிம்மதியான விசயம். குரு இனி நீசமாகி குடும்ப ஸ்தானத்திற்கு போகிறார். உங்களின் சொல்லுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கஷ்டங்கள் தீரும் கடன்கள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது. ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிக்க ராகுவின் மீது குருவின் பார்வை விழுகிறது. கடன் பிரச்சினைகள் தீரும் பண வரவு அதிகரிக்கும். நோய்கள் குணமடையும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள குருவினால் நீங்கள் சொல்லும் சொல்லிற்கு மதிப்பு மரியாதை கூடும். வியாபாரம் தொழிலில் முதலீடுகள் செய்யலாம் லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அஷ்டம் ஸ்தானத்தில் விழும் குருவின் பார்வையால் கஷ்டங்கள் நீங்கும். குருவின் பார்வை பத்தாம் வீட்டில் விழுவதால் உங்களுடைய வேலை தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். ஏழரை சனியால் நெருக்கடிகள் ஏற்பட்டது. ஜென்ம கேதுவினால் சிக்கல்கள் உருவானது. இனி இந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். இனி நல்ல காரியங்கள் படிப்படியாக நடைபெறும். ஏப்ரல் மாதத்தில் குரு அதிசாரமாக மூன்றாம் வீட்டிற்கு சென்று மறையப்போகிறார் அந்த கால கட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றாலும் குருவின் பார்வையால் சந்தோஷமும் பணவரவும் அதிகரிக்கும்.

மகரம்

மகரம் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். குரு உங்க ராசிக்கு மூன்று மற்றும் 12ஆம் வீட்டிற்கு அதிபதி. குரு சில மாதங்களில் உங்க ராசிக்கு வந்து சனியோடு இணைந்து சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே ஜென்ம சனி இருக்கும் நிலையில் ஜென்ம குரு வந்து என்ன செய்யப்போகிறார் என்று சங்கடப்பட வேண்டாம். குரு வீட்டிற்குள் வருவதால் கலக்கம் வேண்டாம் தெளிவு பிறக்கும். உங்க ராசிக்கு ஐந்து, ஏழு,ஒன்பதாம் வீடுகளின் மீது குரு பார்வை விழுகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் புத்திரபாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். ஏழாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணம் சுப காரியங்கள் கைகூடும். இழுபறியாக இருந்த காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். வேலையை பொறுத்தவரைக்கும் இப்போது இருக்கும் வேலையில் கவனமாக இருப்பதே நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் இடம் மாறி அதிசாரமாக உங்க ராசியை விட்டு இரண்டாம் வீட்டிற்கு நகரும் போது சிக்கல்கள் சங்கடங்கள் நீங்கும். ஜென்ம குரு வனத்திலே என்று சொல்வார்கள், பயப்பட வேண்டாம் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் நிறைய போராட்டங்களை வெற்றிகரமாக மாற்றி சாதிக்கலாம். சவால்களை சாதனைகளாக மாற்றுங்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்கு குரு இரண்டு மற்றும் லாப ஸ்தான அதிபதி. பணவரவு கொடுப்பதில் குருவுக்கு நிகர் வேறு இல்லை. மகரம் ராசியில் இருக்கும் குருவினால் உங்களுக்கு விரையம் அதிகரிக்கும் சுப விரையமாக மாற்றுங்கள். விரைய ஸ்தானத்தில் குரு நீசம் பெற்றிருப்பதால் பொருள் விரையம், பண விரையம் ஏற்படும்.வீண் செலவுகள் செய்ய வேண்டாம். ஏற்கனவே 10ல் கேது மூன்றில் ராகு சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். குருவின் பார்வை நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. சொத்து சுகம் சேர்க்கை ஏற்படும். வீடு வண்டி வாங்கலாம். இது சுப விரைய செலவு என்பதால் பிரச்சினையில்லை. ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் என்பதால் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம். நோய்கள் தீரும் ஆயுள் அதிகரிக்கும். அவமானங்கள் நீங்கும். பெண்களாக இருந்தால் தோஷங்கள் நீங்கும். தாலி பாக்கியம் அதிகரிக்கும். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கும்பம் ராசியில் ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம். குருவின் பார்வை ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் வீடான களத்திர ஸ்தானம், ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் விழுகிறது. அந்த கால கட்டத்தில் திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். புத்திர பாக்கிய யோகம் கை கூடி வரும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு விழிப்புணர்வை தரக்கூடிய மனிதர்களை புரிந்து கொள்ள வைக்கக்கூடியதாக இருக்கும்.

மீனம்

மீனம் ராசிக்கு குரு ராசி அதிபதி. குரு நவம்பர் மாதம் முதல் லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இது சரியான நேரம். தொழில் தொடங்கலாம். அதிர்ஷ்டங்கள் நிறைந்த கால கட்டமாக இருக்கும். பணவரவு அதிகமாக கிடைக்கும். செய்யும் முதலீடுகள் லாபகாரமாக இருக்கும். குருவின் பார்வை மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். சந்தோஷமான சம்பவங்கள் அதிகம் நடைபெறும். திருமணத்திற்கு காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு யோகங்கள் அதிகம் தேடி வரும். ஏழு மாதங்களுக்கு பிறகு குரு ஏப்ரல் 2021ஆம் ஆண்டு விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டிற்கு செல்கிறார் இந்த நேரத்தில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளலாம். உங்களுடைய எதிர்பார்ப்புகள், ஆசைகளை நிறைவேற்றித்தரக்கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *